மீனவர்களுக்கு 10 அறிவிப்புகள் முதல் வலுக்கும் காவிரி பிரச்சினை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.18, 2023
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில் 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்பது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்; 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்; 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் இதில் அடங்கும்.
இந்நிகழ்வில் அவர் பேசும்போது, “பிரதமர் மோடி ஆட்சியிலும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம்? மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்” என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
காவிரி பிரச்சினை: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டை பதிவுத்துறையில் முன்கூட்டியே பதிவு செய்து, அதன்பின்னர் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தினர். எனவே, இதே அமர்வு முன்பு வரும் திங்கள்கிழமை தமிழக அரசு மீண்டும் முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’: தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதனால், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
இதனிடையே தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமரை விமர்சிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: அண்ணாமலை: "ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும். பிரதமர் மோடியை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
‘வன்னியர் சங்கக் கட்டிடம்’பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு: சென்னையில் கிண்டி அருகே உள்ள பட் சாலையில், கோயில் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தில், வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கும், பட்டப்படிப்புக்கும் தயாராகி வந்த மாணவர்களை, எந்த வகையிலும் சம்பந்தப்படாத வருவாய்த் துறை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார்.
இமாச்சல் மழைப் பாதிப்பு ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு பாதிப்புகளின் சேத மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், இது ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிக்கப்படுகிறது என்றும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். இதனிடையே மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
“படித்தவருக்கு வாக்களிக்கச் சொல்வது குற்றமா?”: "படித்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்வது குற்றமா?" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இ-கற்றல் தளமான அன்அகாடமி, அதன் ஆசிரியர்களில் ஒருவர், படித்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்லி தனது மாணவர்களிடம் கூறியதற்காக அவரை பணிநீக்கம் செய்தது குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் ஆயுதக்குழு மீண்டும் வன்முறை: மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகா பழங்குடினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தும், உக்ருல் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 47 கிமீ தள்ளியிருக்கும் குகி பழங்குடியினர் வசிக்கும் தவுவாய் குகி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.வி.சேகர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான அவதூறு செய்தியை பகிர்ந்தது தொடர்பான எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
‘இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும்’: எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
