

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு எளிதாக எடுத்துக்கொள்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசின் சட்டப் பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது?
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டாமா? ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடுகிறது. இப்படியே போனால் என்ன நடக்கும்? தண்ணீர் பற்றாக்குறையால் கர்நாடகா மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது கர்நாடக அரசு எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம்?
தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறித்து காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட 4 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்துகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கர்நாடக அரசு என்ன செய்கிறது என்பதைப் பொருத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.