டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை

டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, தொழிற்சங்கங்களுடன் இன்று (ஆக.18) ஆலோசனை நடத்துகிறார்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை சமீபத்தில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில், டாஸ்மாக் பணியாளர்கள் அலுவலகப் பணிகள் சம்பந்தமாக சென்று வர ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.500-ஐ ரூ.750-ஆக உயர்த்தி வழங்குதல், கடைகளில் உள்ள செலவுகள் தொடர்பாக உரிய பில் வழங்கப்பட்டு, கேட்கும்தொகை முழுவதும் வழங்குதல், கடைகளை சுத்தமாகப் பேணுவதுடன், கூடுதல் விலைக்கு விற்பனைசெய்ததாக புகார் இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்குதல், கடைகளில் உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடாக ரூ.100 வழங்குவது ஆகியவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அமைச்சர் சு.முத்துசாமி ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதன் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in