Published : 17 Aug 2023 12:39 PM
Last Updated : 17 Aug 2023 12:39 PM

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி வழங்கிய ராஜேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டு

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி தானம் வழங்கிய மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்

மதுரை: மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி அளவியில் நிதியுதவி வழங்கிய மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.17) மதுரையில் பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்துவரும் ராஜேந்திரனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையினையும் வழங்கி சிறப்பித்தார்.

மதுரை தத்தநேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்ப பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழக முதல்வர் பாராட்டி அவரது சமூக நலப்பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜேந்திரன் குறித்த செய்தி இந்து தமிழ் திசையில் வெளியானது கவனத்தை ஈர்த்தது. அதன் விவரம்: மாநகராட்சி பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளிக் கொடுத்த அப்பள வியாபாரி @ மதுரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x