Published : 04 Aug 2023 07:12 AM
Last Updated : 04 Aug 2023 07:12 AM
மதுரை: மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார்.
அண்மையில் ரூ.71 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவுக்கூடம் கழிப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளார்.
கஜா புயலின்போது பாதிக்கப்பட் மக்களை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் செலவில் டிபன் பாக்ஸ், தட்டு, அப்பளம், வடகம், அரிசி கொடுத்து வந்தார்.
ஊருக்கு மட்டும் இப்படி உதவுவதோடு நிற்காமல், தன்னிடம் பணிபுரியும் 40 ஊழியர்களையும் மனநிறைவாக வைத்துள்ளார். ஒருமுறை ஊழியர்களை ஹைதராபாத்துக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று வந்தார். தற்போது ஊழியர்களை குற்றாலத்துக்கு ரயிலில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வந்த போதிலும், அது தொடர்பாக விளம்பரம் தேடாமல் இருந்து வந்தார். அண்மையில் இவரை நேரில் அழைத்து மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் பாராட்டினார். இதையடுத்தே ராஜேந்திரனின் சேவை அனைவருக்கும் தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் விருதுநகர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விருதுநகரில் பூண்டு கடையில் மாதம் 25 ரூபாய்க்கு பணிபுரிந்தேன். இப்போது எனக்கு கீழ் 40 பேர் பணிபுரிகின்றனர். 1951-ம் ஆண்டில் 300 ரூபாயுடன் மதுரைக்கு வந்தேன்.
முதலில் அரிசி, காய்கறி வியாபாரத்தை செய்து வந்தேன். அதில் ஓரளவு வருமானம் கிடைத்ததை அடுத்து அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சைக்கிளில் போய் வியாபாரம் செய்து வந்தேன். 1988-ம் ஆண்டில் இரு சக்கர வாகனம் வாங்கினேன்.
நான் மதுரைக்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. இங்கு வந்துதான் சம்பாதித்தேன். அந்த பணத்தை மதுரை மக்களுக்கு கொடுக்கிறேன். என்று 3 பெண்கள். அனைவரும் திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட்டேன்.
மீதமுள்ள வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். இறைக்கிற கிணறு ஊறும் என்பார்கள், அதுபோல் கிடைக்கிற வருவாயில் நன்கொடை வழங்குகிறேன். இறைவன் மீண்டும் எனக்கு கொடுக்கிறார்.
தற்போது மாநகராட்சி திரு.வி.க. பள்ளி சமையல் அறை மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு ரூ.7 லட்சத்தில் புதிய சமையல் அறையை கட்டித் தர உள்ளேன்.
மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி கொடுக்க உள்ளேன். செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தர உள்ளேன்.
வியாபாரம் செய்யும் உத்தியை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். அதில் கிடைக்கிற வருமானத்தில் நிறைய தானம், தர்மம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT