

கோவில்பட்டி: பசுவந்தனை அருகே கிராம சபை கூட்டத்தின்போது, குறைகளை சுட்டிக்காட்டிய வேலை உறுதி திட்ட பணித்தள பெண் பொறுப்பாளரை காலணியால் தாக்கிய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பசுவந்தனை அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்புள்ள பூங்காவில் நடந்தது. ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜலட்சுமி முன்னிலை வைத்தார்.
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அதை ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கவிதா (40) என்பவர் கூட்டத்துக்கு வந்துள்ளார். கூட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலையில் அன்றாடம் பொது மக்களுக்கு ஏற்படும் குறைகளை கவிதா கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து அதேபணியில் முன்பு பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த எல்லப்பன் மனைவி ரேவதி (38) என்பவர் கவிதாவிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி, அவர் சாதியை பற்றி இழிவாக பேசி, தனது காலில் இருந்த காலணியை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பசுவந்தனை காவல் நிலையத்தில் கவிதா அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி விசாரணை நடத்தினார். ரேவதி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கைது செய்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.