ஆக.20... திமுக Vs அதிமுக முதல் இமாச்சல் நிலச்சரிவு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.16, 2023

ஆக.20... திமுக Vs அதிமுக முதல் இமாச்சல் நிலச்சரிவு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.16, 2023
Updated on
2 min read

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்: முதல்வர் தகவல்: தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-2024-ம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குச் சுழல் நிதியாக வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, ஆளுநருக்கு எதிராக ஆக.20-ல் திமுக உண்ணாவிரதப் போராட்டம்: “நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் இம்மாதம் 20-ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்: "மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடைபெறும் அதிமுக மாநாடு பற்றி வெளியே தெரிந்துவிடக் கூடாது; திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து அதே ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

‘தேசிய நெடுஞ்சாலைகள் முதல் சுங்கச்சாவடி வரை ஊழல்கள்’: “ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024-இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான் வருவேன் என்று திரும்பப் திரும்ப பிரதமர் மோடி கூறுகிறார். கடந்த 9 ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்கிற மோடி அறிமுகப்படுத்திய உதான் திட்டம் தோல்வி, எச்.சி.எல். இன்ஜின் தயாரிப்பில் ரூபாய் 159 கோடி இழப்பு, பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடியில் கூடுதலாக ரூபாய் 154 கோடி பொதுமக்களிடம் வசூல், எல்லாவற்றுக்கும் மேலாக பாரத் மாலா திட்டத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து: தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த விமானத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக மாணவி சோபியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கைவினைத் தொழிலாளர்களுக்கான திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு: பாரம்பரிய கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் பயனடைய வகை செய்யும் ‘பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்தத் திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்வோர் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைத் தொழில் செய்யக்கூடிய சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்” என்று தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண ஒப்புதல்: இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர் அளவில் நடைபெற்ற 19-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங். எதிர்ப்பு: நேருவின் பாரம்பரியத்தை மாற்றுதல், சிதைத்தல், அவதூறு செய்தல், அழித்தல் என்ற ஒற்றை நோக்கத்துடனேயே பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்பது ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மத்தியில் நடந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுலக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இந்தப் பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல், உத்தராகண்டில் நிலச்சரிவுக்கு 60 பேர் பலி: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட், இமாச்சலில் இதுவரை 60 பேர் பலியாகினர். நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

ஹவாய் காட்டுத் தீ - உயிரிப்பு 100 ஆக அதிகரிப்பு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in