ஹவாய் காட்டுத் தீ | உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஹவாய் காட்டுத் தீ | உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
Updated on
1 min read

லைஹானா: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ உருவானது. சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக வேகமாகப் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தீ கட்டுக்கடங்காமல் பரவியதில் சுமார் 2,200 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில் 86 சதவீத கட்டிடங்கள் குடியிருப்புகள் என்று கூறப்படுகிறது. லைஹானா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. ஏராளமானோர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தகவல். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லைஹானா நகரில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். 1960களில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இந்த காட்டுத் தீ கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி ஹவாய் காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மோப்பநாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹவாய் தீவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in