புதுச்சேரி | காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணம் - ராகுல் காந்தி கோஷத்துடன் தாலிக்கட்டிய இளைஞர்

புதுச்சேரி | காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணம் - ராகுல் காந்தி கோஷத்துடன் தாலிக்கட்டிய இளைஞர்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி காங்கிரஸ் கொடியை ஏற்றினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, செயல் தலைவர் நீலகங்காதரன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனிடையே கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி புதூர் கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தைச் சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை கட்சி அலுவலகத்தில் வைத்தே நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

இதில் ராகுல் காந்தி வாழ்க வாழ்க என கூறியப்படி இளைஞர் பிரகாஷ் தாலி கட்டினார். தொடர்ந்து அவர்களை ராகுல் காந்தி வாழ்க, காங்கிரஸ் கட்சி வாழ்க என முழக்கமிட்டு, கைத்தட்டி காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்தினர்.

வைத்திலிங்கம் பேசும்போது, "ராகுல் காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவரும் விரும்பியதாகவும், ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில், தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்" என்றார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, "இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள்தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். இப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதன்முதலாக ஒரு திருமணம் நடந்துள்ளது. சோனியா, ராகுல் பெயர்களை வாழ்த்தியபடி அன்பரசியின் கழுத்தில் பிரகாஷ் தாலியை கட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

மணமகன் பிரகாஷ் வேலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், மணமகள் அன்பரசி திருபுவனையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in