Published : 15 Aug 2023 06:22 AM
Last Updated : 15 Aug 2023 06:22 AM

மதுரை அதிமுக மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டம் - சென்னையில் பழனிசாமி தொடங்கி வைத்தார்

அதிமுகவின் மதுரை மாநாடு ஆக. 20-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல கத்தில் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள். படம்: ம.பிரபு

சென்னை/மதுரை: மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், எழுச்சி மாநாடு மதுரையில் வரும் ஆக.20-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் 500 பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். ஜோதி தீபத்தை ஏற்றி, மாவட்ட செயலாளர் அசோக்கிடம் பழனிசாமி வழங்கினார். இந்த ஓட்டம், அடையாறு, பள்ளிக்கரணை, செங்கல்பட்டு வழியாக மதுரை நோக்கி செல்கிறது. இந்த ஜோதி, மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும்.

ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் சத்யா, ராஜேஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: நீட்தேர்வு விஷயத்தில் குரோம்பேட்டை மாணவன், அவரது தந்தை மரணம் வேதனையளிக்கிறது. திமுக ஆட்சிக்கு முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து என்பதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கான சூட்சுமத்தையும் தெரிவிக்கவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் உள்ளது. இதற்கு திமுக அழுத்தம் தந்திருக்க வேண்டும். திமுக கூட்டணி எம்.பி.க்கள் பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்தித்து இதுகுறித்து பேசியதுண்டா? நாடாளுமன்றத்திலும் அவர்கள் குரல் கொடுக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றது குறித்து திருநாவுக்கரசர், தான் இருந்த கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் பேசியுள்ளார். அவர் அந்த சம்பவத்துக்குப்பின் அளித்த பேட்டிகள் அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநாட்டுக்கு அழைப்பு: இந்த மாநாட்டில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முனிச்சாலை பகுதியில் இருந்து இரு சக்கர வாகனப் பேரணி நடந்தது. இரு சக்கர வாகனங்களில் சென்ற கட்சியினருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தன்னுடைய காரில் பயணித்தார்.

இதேபோன்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா, பெரிய ரத வீதியில் உள்ள கடை உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார். முன்னதாக, மாநாட்டு பிரச்சார வாகனத்தை ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x