Published : 11 Aug 2023 06:07 AM
Last Updated : 11 Aug 2023 06:07 AM
திருவள்ளூர்: புழல் பெண்கள் தனி சிறை அருகே, இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
சென்னை, புழல் பெண்கள் தனி சிறையை சேர்ந்த 30 பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், புழல், அம்பத்தூர் சாலையில், புழல் பெண்கள் தனி சிறை அருகே ஃப்ரீடம் (Freedom) பெட்ரோல் விற்பனை நிலையம், 1,170 ச.மீ. பரப்பளவில் ரூ.1.92 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை பெட்ரோல், டீசல் மற்றும் எக்ஸ்பி 95 உள்ளிட்ட விநியோக பிரிவுகளை கொண்டு, 20 கேஎல் பெட்ரோல், 20 கேஎல் எக்ஸ்பி 95 மற்றும் 40 கேஎல் டீசல் கொள்ளளவு கொண்டதாக அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை நேற்று சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: புழல் பெண்கள் தனி சிறை அருகே அமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம், இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையம். இங்கு பணிபுரியும் பெண் சிறைவாசிகள் தற்போது மாதம் ரூ. 6 ஆயிரம் தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர். விரைவில் அவர்கள் ரூ. 10 ஆயிரத்தை தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு உருவாக்கி தரப்பட உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகன், சிறைத் துறை டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT