

ஆண்டிபட்டி: கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேனி அருகே அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக தமிழர்களே உள்ளனர்.
இவர்களுக்காக எஸ்டேட் நிர்வாகங்கள் இலவச குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளன. மருத்துவ வசதியைப் பொறுத்தளவில் ‘டிஸ்பென்சரி’ எனும் சிறிய மருந்தகங்களே அதிகளவில் உள்ளன. அறுவை சிகிச்சை மற்றும் பெரு நோய்களுக்கு மூணாறில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையின் பன்னோக்கு மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.
ஆனால் சில ஆண்டுகளாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மேல்சிகிச்சை என்ற பெயரில் கோட்டயம் அல்லது தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றனர். கோட்டயத்துக்குச் செல்ல 139 கிமீ. தூரத்தை கடக்க 5.30 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால், தேனி அரசு மருத்துவமனையைப் பொறுத் தளவில் 89 கி.மீ. தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் அடைந்து விடலாம்.
மேலும் தமிழகம் பூர்வீக மாநிலம் என்பதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பலரும் தேனிக்குத்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். பயண சிரமத்தை குறைக்க தேவிகுளத்தை மையப்படுத்தி ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்ற தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், மருத்துவக் கல்லூரி என்பது இன்னமும் அவர்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது. இதனால் சிகிச்சைக்கு ‘தேனியையே’ அவர்கள் சார்ந்து இருக்கும் நிலை உள்ளது.
இது குறித்து தோட்டத் தொழிலாளர்கள் கூறியதாவது: வாழ்நாள் முழுவதும் தேயிலை தோட்டத்திலேயே தங்கி பணிபுரிகிறோம். இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆபரேஷன், கர்ப்பப்பை கோளாறு உள்ளிட்டவற்றுக்கு பன்னோக்கு மருத்துவமனைகளுக்கு சென்றால் பல்வேறு காரணங்களை கூறி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். ஏற்கெனவே தேனியில் நோயாளிகள் அதிகம் இருக்கும் நிலையில், எங்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் உயர் சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலை உள்ளது. மூணாறில் உள்ள தனியார் பன்னோக்கு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளையும் வெளியிடங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர்.
இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து விடுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு தாலுகா தலைநகரான தேவிகுளத்தில் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை இல்லை என்பது தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராகவே உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மரியாதையாக நடத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இங்கு யாரும் நோயாளிகளை பாகுபடுத்தி பார்ப்பதில்லை. இருப்பினும் படுக்கைகள், மருத்துவ உபகரணத் திறன் போன்றவற்றை கடந்து நோயாளிகள் அதிகரிக்கும்போது சிரமம் ஏற்படத்தான் செய்கிறது. ஆகவே, அந்தந்த பகுதியிலேயே உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து நோயாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தினால் தொழிலாளர்களின் சிரமமும் குறையும் என்றனர்.