

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர்- சேலம் வழியில் ரூ. 320 கோடி மதிப்பீட்டில் ஊத்தங்கரை முதல் ஏ.பள்ளிபட்டி வரையில் நான்கு வழிச் சாலை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரூர் அடுத்துள்ள எருமியாம்பட்டி மற்றும் எச். புதுப்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டோல்கேட் (சுங்கச்சாவடி) அமைக்கும் பணி ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
தற்போது டோல்கேட் அமைய உள்ள இடத்தில் சிமெண்ட் தரைத்தளம் மற்றும் அலுவலகம் ஆகியவை கட்டும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் டோல்கேட் அமைத்தால் உள்ளுர் மக்கள் பாதிப்படைவார்கள் எனக் கூறி டோல்கேட் அமையும் இடத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார்( அரூர்), கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் பணி நடைபெறும் இடத்தில் திரண்டு அங்கு பணியில் இருந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் கே.பி அன்பழகன் பேசுகையில், "இப்பகுதியில் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டோல்கேட் அமைக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் அப்போது டோல்கேட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இவ்வளவு நாட்கள் கழித்து பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு இப்பகுதியில் உள்ள 18 பேரின் நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில் 7 பேர் தங்களுடைய நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டனர்.
இருந்த போதிலும் அந்நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நிலம் கொடுத்ததற்காக நில மதிப்பீடு குறைத்து வழங்கப்பட்டுள்ளது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு மேல் டோல்கேட் அமைக்கும் பணியை இனித் தொடரக்கூடாது" என வலியுறுத்தினார். சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுகவினர் கலைந்து சென்றனர். அதிமுகவினரின் முற்றுகையை தொடர்ந்து டோல்கேட் அமைக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.