காவிரியில் நீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்குக: ஓபிஎஸ்

காவிரியில் நீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்குக: ஓபிஎஸ்
Updated on
1 min read

மதுரை: காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிக்கு முழு நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக அவர் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு மாற்றி வழங்கினால் அது தவறு. சட்டப்படி குற்றம். தஞ்சையில் குறுவை நெல் சாகுபடி பயிர்கள் கருகுகின்றன. அதற்கு முழு காரணம் தற்போதைய திமுக அரசு தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, நமக்கு வழங்க வேண்டிய 16 டிஎம்சி, 32 டிஎம்சி நீரை ஜூன், ஜூலையில் கர்நாடகா அணையிலிருந்து விடுவிக்கவில்லை. இதன் காரணமாக தஞ்சை பகுதியில் பயிர்கள் கருகிப் போகும் சூழல் இருக்கிறது. இதற்கு அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கவேண்டும்.

என்எல்சி விவகாரத்தில் பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க என்எல்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பாணியில், டெல்டா பகுதியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். 18 ஆண்டுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007-ல் ஜெயலலிதா பெற்றார். பத்திரிகை வாயிலாக அன்றைக்கு ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு அவர் கோரிக்கை விடுத்தார். இதன்படி இறுதி தீர்பை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு மத்திய அரசு அரசாணை பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் துரைமுருகன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வழக்காக எடுத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டார். இதனிடையே கர்நாடகா அரசு எங்களுக்கு நீர் போதாது என, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்,பெங்களூர் குடிநீருக்காக கூடுதல் நீரை வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், உச்சநீதி மன்றத்தில் போராடி இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றவர் ஜெயலலிதா. இந்த வரலாற்றை மறைத்து எங்களுக்கு வரலாறு தெரியவில்லை என கூறிய அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in