

புதுச்சேரி: 6 மாதங்களாக ஊதியம் தரப்படாததால், புதுச்சேரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ்கள் நாளை (ஆக.29) ஓடாது என்று ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் சுகாதார இயக்கத்தின் கீழ் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நிரந்தர ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலைய ஒட்டுநர்கள் தற்காலிகமாக ஆம்புலன்ஸ்களை இயக்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் தரவில்லை. இதைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் இயங்கும் சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள், ஓட்டுநர்கள் அதன் தலைவர் புருஷோத்தன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தர்ணா போராட்டம் நடத்திய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறுகையில், “கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. 2023-ல் சட்டப்பேரவையில் முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பின்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.
6 மாதங்களாக ஊதியம் இல்லாமல் எப்படி வாழ முடியும்? இதைப்பற்றி அதிகாரிகள் சிந்திக்காமல் மெத்தனப்போக்காக உள்ளனர். நாளை குடும்பத்துடன் பேரணியாக வந்து சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம். எங்களது நியாயமான இந்தப் போராட்டத்தின் காரணமாக நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸ்கள் ஓடாது” என்று தெரிவித்துள்ளனர்.