

ஓசூர்: கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து யானைகள் வலசை தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் காவிரி ஆற்றைக் கடந்து குட்டிகளுடன் 10 யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வந்துள்ளன. இதையடுத்து, கிராம பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு வரும் யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதி வரை செல்வதோடு, 6 மாதங்கள் வரையில் இப்பகுதியில் சுற்றித் திரியும்.
கடந்தாண்டு, வலசை வந்த 200 யானைகளில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 20 யானைகள், உரிகம் வனப்பகுதியில் 40 யானைகள் உள்ளிட்ட 100 யானைகள் நிரந்தரமாகத் தமிழக வனப்பகுதியில் தங்கிவிட்டன.
கடந்த காலங்களில் வலசை வரும் யானைகள் வலசை பாதையில் உள்ள வனக்கிராமங்களில் புகுந்து விளை நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தின. மேலும், ஊருக்குள் நுழையும்போது, யானைகள் - மனித மோதல் நிகழ்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது, கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து யானைகள் வலசை பயணத்தைத் தொடங்கியுள்ளன. கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து உரிகம் அருகே தெப்பகுழி, உகினியம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆழம் குறைந்த பகுதிகள் வழியாக நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் வலசை வந்தன.
இதையடுத்து, கடந்த காலங்களைப்போல யானைகள் கூட்டம் விளை நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்வதைத் தடுக்க வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து யானைகள் வலசையை தொடங்கியுள்ள நிலையில், வனத்தை விட்டு யானைகள் கூட்டம் வெளியேறாமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், தீவனப்புல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யானைகள் வனப்பகுதியிலிருந்து கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சூரிய சக்தி வேலி மற்றும் யானை தாண்டா பள்ளம் மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டன. எனவே, தற்போது, வனப்பகுதியை ஒட்டிய முக்கிய பகுதிகளில் கிரானைட் கல் சுவர் எழுப்பி உள்ளோம். தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி வனப்பகுதி சாலையில் 35 கிமீ தூரம் நவீன இரும்பு கம்பிவட தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.