தானே கிரேன் விபத்தில் கிருஷ்ணகிரி பொறியாளர் உயிரிழப்பு: உடலை விமானம் மூலம் கொண்டுவர முதல்வருக்கு கோரிக்கை

தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரி பொறியாளர் சந்தோஷ்.
தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரி பொறியாளர் சந்தோஷ்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளர் உடலை விமானம் மூலம் விரைந்து கொண்டு வர முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி போகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விஐபி நகரில் வசித்து வருபவர் இளங்கோ. இவரது மகன் சந்தோஷ் (36). இவருக்கு திருமணமாகி ரூபி என்கிற மனைவியும், 5 வயதில் ஆத்விக் மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் கட்டுமான துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விஎஸ்எல் இந்தியா பிரைவேட் லிமடெட் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில், தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ், கண்ணன் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். சந்தோஷ் உயிரிழந்த தகவலறிந்து அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சந்தோஷின் உடல் தாமதமின்றி, விமானம் மூலம் கொண்டு வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சந்தோஷின் குடும்பத்தினர் கூறும்போது, ''விஎஸ்எல் கட்டுமான நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக சந்தோஷ் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வந்தவர், தமிழகத்துக்கு இடமாற்றம் கேட்டு வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்நிறுவனத்தினர், தமிழகத்துக்கு சந்தோஷை இடமாற்றம் செய்தனர். ஒரு மாதம் கழித்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியில் சேர இருந்தார். இவ்வாறான நிலையில், அவரது இன்று நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையடைந்துள்ளோம்.

கிரேன் விபத்து தொடர்பாக மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று இரவு 11.30 மணிக்கு கார்கோ விமானம் மூலம் பெங்களுர் கொண்டு வந்து, அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஒருவேளை விமானம் நேரத்துக்கு உடல் ஒப்படைக்காவிட்டால், ஆம்புலன்ஸ் மூலம் சாலை வழியாக உடலை கொண்டு வர 22 மணி நேரம் ஆகும். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இறந்தவர்களின் உடலை விரைவாக விமானம் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in