தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயில்கள் பல மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதி

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயில்கள் பல மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதி
Updated on
1 min read

திருச்சிராப்பள்ளி யார்டில் பாதை வளைவு சீரமைப்பு பணி காரணாக, தென் மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்னை வந்த விரைவு ரயில்கள் 4 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

சென்னையில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக, தென் மாவட்டங்களில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு,மறுநாள் காலை எழும்பூர் ரயில்நிலையத்தை வந்து சேரும். இந்தரயில்களில் தினமும் 40 ஆயிரத்துக்கும்மேலான நபர்கள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பாண்டியன், பொதிகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாகின. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகே யார்டில் ஒரு வளைவு பாதையை நேராக மாற்றும் பணி நடைபெறுகிறது. இப்பணி காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் நேற்று காலை பல மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. மதுரையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்ட பாண்டியன் விரைவு ரயில் நேற்று காலை 5.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு பதிலாக 9 மணிக்கு வந்தடைந்தது.

செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட பொதிகை விரைவு ரயில் நான்கரை மணி நேரம் தாமதமாக காலை 10.05 எழும்பூர் வந்தடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு காலை 6.10 மணிக்கு வந்தடைய வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் 4.20 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களும் 4 மணி நேரம் வரை தாமதமாக சென்னை எழும்பூருக்கு வந்து சேர்ந்தன. மற்ற ரயில்கள் சிறிது நேரம் தாமதாகின. விரைவு ரயில்கள் பல மணி நேரம் தாமதம் காரணமாக, பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in