

என்எல்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு அவசர வழக்காக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா?” என மனுதாரர் தரப்புக்கும், “கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?” என என்எல்சி தரப்புக்கும் கேள்வி எழுப்பினார்.
பின்னர், கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்குபிழப்பீடு வழங்குவது குறித்து பிரமாணப்பத்திர மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்எல்சி தரப்புக்கும் உத்தரவிட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்: பாஜகவின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பொத்தாம் பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று திராவிடத்தைச் சொல்வதைப் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
மேலும், “ஆளுநராக வந்தவர், இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திமுக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். ஆளுநர் பதவி, என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதி ஆலோசனை மண்டபமாக, கிண்டி ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உரிமைத் தொகை: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: தமிழகத்தில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.150-ஐ கடந்த நிலையில், மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
“விபத்துக்கு சிலிண்டர் காரணமல்ல, வீண்பழி போடாதீர்கள்”: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசுக் கிடங்கு வெடி விபத்துக்கு சிலிண்டர் காரணம் இல்லை எனவும், வீண்பழி போடவேண்டாம் எனவும் ஓட்டல் உரிமையாளரின் குடும்பத்தினர், விசாரணை அலுவலர்களிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறிப்பிட்டத்தக்கது.
சிபிஐ விசாரணைக்கு பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்கள் எதிர்ப்பு: கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கினை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவில் இரண்டு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, பெண்களுக்கு எதிராக அக்கலவரம் தொடர்பாக நடந்த தனிப்பட்ட சம்பவம் இல்லை. பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விருப்புகிறதோ அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒரு வழிமுறையை (mechanism) உருவாக்க வேண்டும். குற்றம் தொடர்பாக வழக்கு போடுதல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தலை உறுதி செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக மே 4-ம் தேதி முதல் இதுவரை எத்தனை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு மத்திய, மாநில அரசுகள் மவுனம் காத்தன.
விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மணிப்பூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், மே 4 சம்பவத்தை விசாரிக்க சுதந்திரமான ஓர் அமைப்பை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, இந்த வழக்கினை அசாமுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.
நாடாளுமன்றம் 8-வது நாளாக முடக்கம்: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் இரு அவைகளும் திங்கள்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சினிமோட்டோகிராஃப் திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகள் - ஆளுங்கட்சி அமளிகளால் தொடர்ந்து 8 நாட்களாக முடங்கியது.
“விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன”: "மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். எனவே, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாடாளுமன்றத்துக்குள் பிரச்சினைகளை எழுப்பாமல் வீதியில் கோஷமிடுவது சரியா? அப்படியானால், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்ன பயன்? நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து ஓட வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வந்தது?" என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
சைபர் க்ரைம் குற்றப்பிரிவு விரிவாக்கத்துக்கு ரூ.9.28 கோடி: இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கேரள சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கண்ணீருடன் பங்கேற்பு: கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் 5-வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட அந்த 5 வயது சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து கேரள போலீஸார் எக்ஸ் தளத்தில், "மன்னித்துவிடு மகளே’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.