

சென்னை திருமயிலை மெட்ரோரயில் நிலையப் பணி விரைவில்தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ. தொலைவில்,3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
தற்போது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல, பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், திருமயிலை மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
திருமயிலை நிலையம் (மயிலாப்பூர் நிலையம்) 3-வது மற்றும்4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இங்கு பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 35 மீட்டர் (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது. இதற்காக, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுத்தப்பட உள்ளன.
ஓராண்டுக்கு முன்பே பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.