

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியா வாழ் இந்திய வம்சாவளி பெண்ணிடம் தாலியை கழற்றும்படி கூறவில்லை என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்துவிமானத்தில் கணவருடன் சென்னை வந்தபோது, சுங்கத்துறை அதிகாரிகள் தாலியை கழற்றும்படி நிர்பந்தம் செய்ததாக சில தினங்கங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: அந்த பெண் பயணி சொல்வது முற்றிலும் தவறானது. அன்றைய தினம் இரண்டு வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முயன்றதை பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.
இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்தி, அந்த நகைகள் குறித்த விவரங்களை கேட்டனர். அவை எங்கள் சொந்த நகைகள் என்று கூறி விவரங்கள் அளிக்க மறுத்துவிட்டனர். அந்த பெண் குறிப்பிட்டதுபோல் தாலியை கழட்டுமாறு சுங்க அதிகாரிகள் கூறவில்லை. அந்த பெண் பயணி, அதிகாரிகளின் சட்டப் பணியை செய்ய ஒத்துழைக்காமல், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.
பெண்ணின் கணவர் மட்டும்தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் தங்க காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார். அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 பவுன்). அதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம். அந்த நகைகளுக்கு ரூ.6.5 லட்சம் சுங்கவரி விதிக்கப்பட்டது. அதை கட்டுவதற்கு மறுத்து விட்டனர். அந்த நகை கைப்பற்றப்பட்டு, பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது.
அந்த நகைகள் மீது உரிய சுங்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி அவர்கள் மலேசியா திரும்பும்போது, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்பு, உடனடியாக நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தியாவில் வசிப்போர் மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டு பயணிகள் ரூ.50 ஆயிரம் வரை மதிப்புள்ள நகைகளை, சுங்கவரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.