என்எல்சி விவகாரம் | விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் - ஜி.கே.வாசன்

என்எல்சி விவகாரம் | விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் - ஜி.கே.வாசன்
Updated on
1 min read

மதுரை: என்எல்சி நிறுவனத்துக்கென விளைநிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நேற்று நடைபயணம் தொடங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரைக்கு வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "என்எல்சி நிறுவனத்துக்கென விளைநிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக விளைநிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். இப்பணியை உடனே நிறுத்தவேண்டும்.

மணிப்பூர் விவகாரத்தை பொருத்தவரையில் மத்திய அரசு உண்மை நிலைகளை பாராளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வது தேவையற்றது. உண்மை நிலை, பிரச்சினையை மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என செயல்படுவது ஏற்புடையதல்ல. மணிப்பூரில் தற்போது, அமைதி திரும்புகிறது. 100 சதவீதம் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக உள்ளன. மணிப்பூரில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி தண்ணீரை முறையாக கர்நாடக அரசிடம் பேசி விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்காதது தமிழக அரசின் தவறு. அப்பாவி விவசாயிகளை எப்படியாவது ஒரு விதத்தில் திசை திருப்பலாம் என, அரசு நினைக்கிறது. அதை அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். உண்மை நிலையை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இருக்கின்றனர்." இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in