

என்எல்சி முற்றுகை - பாமக போராட்டத்தில் வன்முறை: என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீஸார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடையே அன்புமணி ராமதாஸை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. பின்னர், நிலைமை சீரானது. மாலையில் அன்புமணி விடுவிக்கப்பட்டார்.
“நிலம் கையகப்படுத்துதலை நிறுத்தாவிட்டால்....” - அன்புமணி எச்சரிக்கை: பாமகவின் முற்றுகை போராட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறுகையில், “கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம். எனவே அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்கக்கூடும்” என்று கூறினார்.
இதனிடையே “பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை கட்டுப்படுத்த முடியாது” என்று நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நெய்வேலி விரைந்த தமிழக காவல் துறை தலைவர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக பாமக சார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்எல்சி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கேள்வி: “நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?” என்று என்எல்சி நிர்வாகத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
என்எல்சி பிரச்சினை - தமிழக அரசு விளக்கம்: என்எல்சி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், என்எல்சி விரிவாக்கத்துக்கு பரவனாறு மாற்றுப் பாதை அமைக்கும்போது, பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர் இழப்பீட்டு தொகையாக, பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் பெற்று அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு தற்போது ஏக்கருக்கு ரூ.23 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
“மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைப்போம்”: மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை அம்மாநிலம் செல்ல உள்ள எதிர்க்கட்சி எம்.பி.கள், ஆய்வுக்குப் பிறகு அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
அமளிக்கு மத்தியில் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்: மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் காலையில் மக்களவைத் தொடங்கிய மூன்று நிமிடங்களுக்கு மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மாநிலங்களவை காலையில் சற்றே அமைதியுடன் தொடங்கியது. அவை தொடங்கியதும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வு பெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியாவிடை குறிப்பும் வாசித்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
“மணிப்பூர் வீடியோ வெளியானதில் சதி”- அமித் ஷா: மணிப்பூரில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் ஒரு கும்பல் பழங்குடியினப் பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற வீடியோ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதன் பின்னனியில் சதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இதனிடையே, மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை: அரசு வாதம்: குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று தமிழக அரசு சார்பில், செந்தில் பாலாஜி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.