Published : 28 Jul 2023 07:20 PM
Last Updated : 28 Jul 2023 07:20 PM

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறை: அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மதுரை: விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

என்எல்சி விவகாரம் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்எல்சி விரிவாக்கத்துக்கு பரவனாறு மாற்று பாதை என்பது முக்கியமானது. இதை செய்தால் தான் சுரங்கத்துக்கான மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தப் பணிகளை மேற்கொண்டால் தான் மின்சார உற்பத்தி தடைபடாமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் உரிய மின்சாரம் நமக்கு கிடைக்கும். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலமாகவும், வேளாண் துறை அமைச்சர் மூலமாகவும் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2006 முதல் 2016 வரை எடுக்கப்பட்ட 104 ஹெக்டேர் பரப்பளவில் வரக் கூடிய 300-க்கு மேற்பட்ட உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட 83 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 400 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.6 லட்சம் நீங்கலாக, மேலும் ரூ.14 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

2000 முதல் 2005 வரை எடுக்கப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவில் வரக் கூடிய 100 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கியதை தவிர்த்து, தற்போது ரூ.6 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. மெத்தமாக 1088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடி இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் 26 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களுக்கு கருணைத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

பரவனாறு மாற்று பாதை அமைக்கும் போது, பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர் இழப்பீட்டு தொகையாக, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் பெற்று அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏக்கருக்கு ரூ.23 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் என்எல்சியில் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, அந்த போராட்டம் அறவழியில் நடக்க கூடிய போராட்டம் என்பதை தாண்டி, வன்முறையாக வெடித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள், நில உரிமையாளர்கள் இந்த பிரச்சினையை அமைதியாக அனுகினாலும், வெளியூரில் இருந்து வரக்கூடியவர்கள, அரசியல் உள்நோக்கத்துடன், தூண்டுதல் காரணமாக செய்த இந்த செயலால், வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது.

வன்முறையால் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பிரச்சினையை பேசி தீர்வு கான முடியும். விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அரசு இதில் கடுமையாக இருக்கும். வன்முறையை ஒரு போதும் தமிழக அரசு அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x