

சென்னை: அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்க செங்கல்பட்டில் 137 ஹெக்டர் பரப்பில், சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைப்பது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் 137 ஹெக்டேரில் தாவரவியல் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சர் தெரஸ் கோஃபே ஆகியோரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, லண்டன் க்யூகார்டன் இயக்குநர் ரிச்சர்ட் டெவெரெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், தொழிற்சாலைகளுக்கான பசுமை மதிப்பீடு கட்டமைப்புத் திட்டத்தையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். இதுகுறித்து அமைச்சர்கள் மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், இங்கிலாந்து துணை உயர் ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தமிழ்நாட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் அளவை ‘பசுமை மதிப்பீடு நுட்பம்’ மூலம் கண்காணித்து, குறைவான கார்பன் அளவை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு ‘பசுமை தொழிற்சாலை’ என்ற சான்றிதழ் வழங்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், தொழிற்சாலைகளில் கார்பன் அளவை குறைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய, அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில், லண்டன் நிறுவனத்தின் பங்களிப்புடன், சர்வதேச தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நறுமன மலர் தோட்டங்கள், மூலிகைத் தோட்டம், உயர்ரக தாவர சேகரிப்பு மையங்கள், இயற்கை அனுபவத் தடங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
நெய்வேலி நிலகிரி சுரங்க விவகாரம் தொடர்பாக, முதல்வர்உரிய நடவடிக்கையை மேற்கொள்வார். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.