

என்எல்சி விரிவாக்கம்: விளைநிலங்கள் அழிப்புக்கு எதிர்ப்பு: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.
இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதில், ஒரு சில பொதுமக்கள், விவசாயிகள் மறுத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்ச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணியை மேற்கொண்டது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தண்ணீர் பீச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.
“என்எல்சி-யின் அடியாள் போல தமிழக அரசு” - அன்புமணி: "உழவர்களின் நண்பன் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மக்களவையில் நிறைவேறியது வனப் பாதுகாப்பு திருத்த மசோதா: மக்களவையில் மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இது நாட்டின் எல்லையிலிருந்து 100 கி.மீ., தொலைவுக்குள் உள்ள நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவும், வனப்பகுதியில் உயிரியல் பூங்கா, சஃபாரி மற்றும் சூழிலியல் சுற்றுலா அமைக்கவும் வழிவகை செய்கிறது.
திமுக ஃபைல்ஸ் பகுதி 2: ஆளுநரிடம் ஆதாரம் அளித்ததாக அண்ணாமலை தகவல்: "திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களையும் ஆளுநரிடம் வழங்கி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ விளக்கப் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அளித்தன. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் இந்தத் தீர்மானத்தை புதன்கிழமை காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து, ‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி மக்களவையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வைரலான அந்த வீடியோவில் பிரதமர், "எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வாழ்த்தைக் கூறுகிறேன். 2023-ல் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நீங்கள் நன்றாக ஆயத்தமாகுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
அமித் ஷா கடிதமும், மோடியின் அணுகுமுறையும்...: “ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடைவெளியிருப்பது தெரியும். இந்த இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கடிதத்துக்கு எழுதிய பதிலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடிதத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்கே,"ஒரு நாளில் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், தீவிரவாத குழுக்களுடனும் பிரதமர் ஒப்பிட்டு பேசுகிறார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக உருக்கமாக கடிதம் எழுதுகிறார். நீண்ட காலமாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது தெரியும். இப்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி ஏற்பட்டிருப்பது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
“தேவை ஏற்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியா தாண்டும்”: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 24-வது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தப் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக லடாக்கின் திராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "1999-ல் நடந்த கார்கில் போரின்போது நாம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்கவில்லை. அதைக் கடக்க முடியாது என்று அர்த்தமல்ல. தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் எல்லைக் கோட்டைக் கடப்போம்" என்று தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம்: 5 கோடி பணியாளர்கள் நீக்கம்: 2022- 2023 நிதி ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இது கடந்த 2021- 22 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.