

புதுடெல்லி: மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி மக்களவையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் வைரலாகும் வீடியோவில் பிரதமர், "எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வாழ்த்தைக் கூறுகிறேன். 2023-ல் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நீங்கள் நன்றாக ஆயத்தமாகுங்கள்" என்று கூறியிருக்கிறார். அவர் அவ்வாறு கூற, அவையில் இருந்த பாஜக மற்றும் ஆதரவு எம்.பி.க்கள் மேசைகளைத் தட்டி ஓசை எழுப்பி ஆரவாரம் செய்கின்றனர். அப்போது எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து எம்.பி. ஒருவர் 'இது ஆணவப் பேச்சு' எனக் கூறுகிறார். அதற்கு பிரதமர் மோடி "ஆணவம் அல்ல, அர்ப்பணிப்பு. ஆணவம் உங்களுக்குத்தான் இருக்கிறது. அதன் விளைவுதான் 400 எம்.பி.க்கள் 40 ஆகியுள்ளது" என்று கூறுவது பதிவாகியிருக்கிறது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எந்தத் தருணத்தில் பேசப்பட்டது? - கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றினார். அப்போது அவர் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் பேசினார். அந்த நீண்ட உரையில் அவர், "2018 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது என் மாண்பைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நாட்டு மக்கள் முன் நான் எனது கருத்துகளை முன்வைத்தேன். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த அமளிக்கு மத்தியில் நான் உரையாற்றினேன்.
இப்போது எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வாழ்த்தைக் கூறுகிறேன். 2023-ல் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நீங்கள் நன்றாக ஆயத்தமாகுங்கள். நாங்கள் தேசத்துக்கு செய்யும் சேவையினால், தேச அர்ப்பணிப்பால் இணைக்கப்பட்டுள்ளோம். நீங்கள் யார் பெரியவர் என்ற அகந்தையால் 400ல் 40 ஆக சரிந்துள்ளீர்கள். தேச சேவை எங்களை 2-ல் இருந்து இப்போதைய எண்ணுக்கு உயர்த்தியுள்ளது. நீங்கள் பொய்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2018 நம்பிக்கையில்லா தீர்மானம் பின்னணி: கடந்த 2018 ஜூலை மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. கேசி னேனி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் 3 நாட்கள் கழித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் இரவு 9.15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.
தீர்மானம் ஏற்பு: இதற்கிடையில், மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.