மகளிர் உரிமைத் தொகை அப்டேட் முதல் நாடாளுமன்ற முடக்கம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 24, 2023

மகளிர் உரிமைத் தொகை அப்டேட் முதல் நாடாளுமன்ற முடக்கம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 24, 2023
Updated on
3 min read

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் தொடக்கம்; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடந்தது. இம்முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமை தொகை திட்டமும் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். நிதிச் சூழல் காரணமாக தற்போது பயன்பாட்டுக்கு வருகிறது. மகளிர் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதார மேம்பாடு அடையவும் உதவும். இந்தத் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுபற்றியெல்லாம் யாரும் கவலை கொள்ள வேண்டாம்" என்றார்.

‘X’ உள்ளே... நீலக் குருவி வெளியே: ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக் குருவி’ வெளியேயும் சென்றுள்ளது. இதற்கு எதிர்வினையை எலான் மஸ்க் சந்தித்து வருகிறார்.

அம்பேத்கர் படம்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்: "தமிழக அரசு தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகள், உருவப்படங்கள் தவிர மற்ற தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதனிடையே "இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உத்தரவு: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு: அவைத் தலைவரின் அறிவுறுத்தலைக் கேட்காமல், மணிப்பூர் கொடூரத்தை முன்வைத்து நாடாளுமன்ற அவையின் மையத்துக்கு வந்து முழக்கம் எழுப்பிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மணிப்பூர் விவகாரம்: 3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் அமளியால், மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் மக்களவை இருமுறை ஒத்திவைப்புகளுக்குப் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது உள்துறை அமித் ஷா பேசினார். அப்போது அவர், "மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரதமர் பேச வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால், அதுபற்றி விவாதிக்க வேண்டும்" என்றார்.

மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இண்டியா - என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் போட்டியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பாஜக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., டெரெக் ஓ பிரையன், ‘ரியாக்டிவ் மோடு’ நிலையில் பாஜக இருப்பதாகவும், மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்ப "காப்பிகேட்" நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

கியான்வாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை: உத்தரப் பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து அமைந்துள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் உத்தரவை ஜூலை 26-ம் தேதி மாலை வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தடை உத்தரவு முடிவதற்குள், தொல்லியல் துறையின் ஆய்வினை எதிர்த்து மசூதி நிர்வாகம் தாக்கல் செய்யும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

‘கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்க’: வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலில் பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடுமையான அணுகுமுறைகளைக் கையாளக் கூடாது. மாறாக, கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குஜராத், மகாராஷ்டிரா, கோவாவில் கனமழை: கடலோர கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், குஜராத்தின் சவுராஷ்ட்ரா - கட்ச் பகுதிகளிலும், மத்திய மகாராஷ்டிராவிலும், கோவாவிலும் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி: சீனாவின் வட கிழக்கு பகுதியில் ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கைப்பந்து அணியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 11 உயிரிழந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in