Published : 24 Jul 2023 04:02 PM
Last Updated : 24 Jul 2023 04:02 PM
புதுடெல்லி: குஜராத்தின் சவுராஷ்ட்ரா - கட்ச் பகுதிகளிலும், மத்திய மகாராஷ்டிராவிலும், கோவாவிலும் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிப்பு: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்.கே. ஜெனமணி, "குஜராத்தின் சவுராஷ்ட்ரா - கட்ச் பகுதிகளிலும், மத்திய மகாராஷ்டிராவிலும், கோவாவிலும் கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும். கடலோர கர்நாடகாவிலும் தற்போது கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குஜராத்தில் பரவலாக மழை குறைந்திருக்கிறது. எனவே, வெள்ள பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இயல்பு நிலை திரும்புவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மும்பை, கோவா, கடலோர கர்நாடகா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை நாங்கள் தவிர்த்துவிட்டோம். நாளையும், நாளை மறுநாளும் தெலங்கானாவில் மிக கனமழை பெய்யும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம். டெல்லியைப் பொறுத்தவரை குறிப்பிடும்படியான மழை எச்சரிக்கை இல்லை. அதேநேரத்தில், அதிக ஈரப்பதம் மற்றம் அதிக வெப்பநிலையை எதிர்பார்க்கலாம். டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாளை இரவு மழை பெய்யும்" என தெரிவித்தார்.
40% கூடுதல் மழை: வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு இந்தியாவில், ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை 40 சதவீத மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித் பல்திஸ்தான் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எச்சரிக்கும் யமுனை: டெல்லியில் மழை அளவு குறைந்துள்ள போதிலும், யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டமான 205.33 மீட்டரைத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், கரையோர மக்களை இன்னும் அதிக அளவில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய ரயில்வே மேம்பாலங்களில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், "டெல்லி - ஷஹ்தாரா இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் புதுடெல்லி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT