Published : 24 Jul 2023 06:38 PM
Last Updated : 24 Jul 2023 06:38 PM
திருநெல்வேலி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சேதமடைந்து பல்வேறு வகைகளில் மக்களுக்கு அபாயகரமானதாக மாறி வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.965 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் ரூ.14 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் கேலரிகள் அமைக்கப்பட்டு, அவற்றின்மேல் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டன.
இவை தரமாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளும், தனியார் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மே மாதம் 22-ம் தேதி பாளையங்கோட்டையில் சூறைக் காற்றுடன் மழை கொட்டியபோது,
இந்த மைதானத்தின் மேற்குப் புறத்தில் கேலரிகளின் மேல் அமைக்கப்பட்டிருந்த 2 மேற்கூரைகளும், இரும்பு தூண்களும் சரிந்து விழுந்தன. அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே மேற்கூரைகளும், இரும்பு தூண்களும் சரிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று சம்பவ இடத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இச்சம்பவத்தை அடுத்து மைதானம் சில நாட்கள் மூடப்பட்டிருந்தது. சரிந்து விழுந்த மேற்கூரைகள், உடைந்த இரும்பு கம்பிகள் அகற்றப்பட்டபின் மறுபடியும் திறக்கப்பட்டது.
ஆனால் கேலரிகள் உடைந்தது தொடர்பான விசாரணை குறித்து இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த மைதானம் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் தற்போது காணப்படுகிறது. மைதானத்தில் உள்ளே வடக்கு பக்கத்தில் அபாய நிலையில் பள்ளம் காணப்படுகிறது.
அதனை மூடி வைத்திருந்த சிலாப்புகள் உடைந்து அகோரமாக காட்சியளிக்கின்றன. இந்த பகுதியில் விளையாடும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு ஆபத்து நேரக்கூடும். மேலும் இங்குள்ள கழிவறைகள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. மாற்றுத் திறனாளிகள் கழிவறையும் பூட்டியே கிடக்கிறது. பராமரிப்பும் இல்லை. வ.உ.சி மைதானத்தின் மேற்கு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.
இந்த பூங்காவினுள் உள்ள மின்சார அறை மிகவும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகிறது. அதிக மின் அழுத்தம் கொண்ட வயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சிறுவர், சிறுமிகள் வந்து செல்லும் இந்த பகுதியில் அஜாக்கிரதையாக மின்சார அறையை திறந்துவைத்திருப்பது வேதனையானது. பூங்காவில் மின்சார விளக்குகளும் சரிவர எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT