

சென்னை: காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக 2025-ம் ஆண்டுக்குள் காசநோயைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 40,000முதல் 70,000 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் ஆரம்பக்கட்ட சிகிச்சையிலேயே குணமடைந்து வருகின்றனர். ஆனாலும், காசநோயாளிகளை முழுமையாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்கிறது.எனவே, கிராமப்புறங்களில் உள்ள காசநோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 424ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் காசநோயாளிகளைக் கண்டறிந்து, பாதிப்புக்கு ஏற்ப, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. கிராமப்புற மக்களிடம் காச நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தக்க சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு பரிசோதனை மையம் தொடங்கப்படும்.
ரூ.500 உதவித் தொகை: இந்த மையத்தில் பரிசோதனை மூலம்பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை, தொடர்சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் வசிப்பவர்கள், அருகில் வசிப்பவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் காசநோயைக் கட்டுப்படுத்தி, முழுமையாக ஒழிக்க முடியும்” என்றார்.