

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் பாதிப்பு தொடர்பாக சிறப்புக் குழு நடத்திய ஆய்வின்படி, கடந்தாண்டை விட 53 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு 1,32,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மா விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக் கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டில் மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியது முதல், பூச்சித் தாக்குதல் மற்றும் வெயில் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மா மகசூல் பாதிப்பை மதிப்பீடு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50 கோடி நிவாரணம் வழங்க ஆட்சியர் கே.எம்.சரயு, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் பூபதி கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் பாதிப்பு குறித்து சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டது.
அதன்படி, கடந்தாண்டை விட நிகழாண்டில் 53 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மா சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம், பூச்சி மற்றும் பூஞ்சான் மருந்து தெளிக்க ரூ.12 ஆயிரம், உர மேலாண்மைக்கு ரூ.12 ஆயிரம், பயிர் மேலாண்மைக்கு ரூ.26 ஆயிரம் என மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவினம் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் சிறப்புத் தொகுப்பாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம், 25 ஆயிரம் ஹெக்டேருக்கு ரூ.50 கோடி நிதி கோரி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் மூலம் அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பர்கூர் எம்.எல்.ஏ டி.மதியழகன் (திமுக) கூறியதாவது: இயற்கை சீற்றங்கள், பூச்சித் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்புகளை சரி செய்ய மா மரங்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன்.
நிகழாண்டில் மா மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.