

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அதிமுக விமரிசையாக மாவட்டம்தோறும் கொண்டாடிவருகிறது. திண்டுக்கல்லில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது அவர், "பாரதப் பிரதமர் எம்ஜிஆர்.. (சமாளித்துக் கொண்டு) பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எம்ஜிஆர் விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி எல்லாம் இருக்கு... இருந்து சாப்பிட்டு போயிடலாம்" என்றுகூற சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். அவர் மேற்படி என்று எதைக் குறிப்பிட்டார் என்ற அர்த்தம் புரிந்ததுபோல் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.
ஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்க, "என்னது ரெய்டு நடக்கிறதா? அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே" எனக் கூறிச் சென்றார்.
ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை.. பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் என்றெல்லாம் பேசி சர்ச்சைகள் குறையாமல் பார்த்துக் கொள்ளும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.