

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்மாள் (85). இவர், நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆற்காடு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அப்பகுதியில் சாலையில் நடந்துச் சென்றபோது கீழே கைபேசி ஒன்று இருந்துள்ளது. அதை எடுத்த மூதாட்டி ஆற்காடு நகர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தமிழ் செல்வி மற்றும் காவல் துறையினரிடம் சம்பவத்தை கூறி கைபேசியை ஒப்படைத்தார்.
இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம். மூதாட்டியின் இந்த செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும், கைபேசியின் உரிமையாளர் குறித்து காவல்துறையினர் விசாரித்து, அவரை கண்டுபிடித்து தகவலையும் தெரிவித்துள்ளனர். அவர் வந்ததும் கைபேசி அவரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.