

கிருஷ்ணகிரி: தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதைப்போல, விலை வீழ்ச்சி யடையும்போது விவசாயிகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 டன் மகசூல் கிடைக்கிறது.
இங்கு அறுவடையாகும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை சரிந்து, சந்தையில் வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால், விற்பனையாகாத தக்காளியை நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டும் நிகழ்வுகள் நடந்தன. பல விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விட்டு அழித்தனர்.
போதிய விலை கிடைக்காததால், அடுத்த பருவத்தில் தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது. மேலும், பருவம் தவறிய மழையால் தற்போது மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து கடந்த சில வாரங்களாகத் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனையாகிறது. விலை மீண்டும் கட்டுக்குள் வர இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகிரெட்டி கூறியதாவது:
மகசூல் பாதிப்பால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தற்போது, மாவட்டத்தில் பல விவசாயிகள் மீண்டும் தக்காளி நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அறுவடைக்கு வர 3 மாதமாகும்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுப்பதைப்போல, விலை வீழ்ச்சியின்போது விவசாயிகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.