Published : 16 Jul 2023 11:28 AM
Last Updated : 16 Jul 2023 11:28 AM
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த மாதம் 17-ம் தேதி, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். இதையடுத்து, நிர்வாகிகளுடன் 3 நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ஏற்கெனவே கடலூரில் ஓராண்டாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பாடசாலையில் படித்த பல மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைக்கேட்ட விஜய், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவெடுத்தார்.
அந்த வகையில், காமராஜர் பிறந்த நாளில் இரவு நேர பாடசாலையை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொடங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அதற்கான செலவை விஜய் மக்கள் இயக்கமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளான நேற்று முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கபொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்கலந்து கொண்டு, பாடசாலையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக கன்னியாகுமரியில் 4, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா 3, சென்னை, சேலம், கோவை, திருச்சியில் தலா 1 என 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் இதனை படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம்.
பயிலகத்தில் மாணவர்களுக்கு பயிற்று விக்க தமிழகம் முழுவதிலும் இருந்து இதுவரை 302 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆசிரியைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த பாடசாலை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தற்போது, இந்த பயிலகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மட்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையைப் பொறுத்து, அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பயிலகத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை மாணவர்களின் பெற்றோர், பயிலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனை பெட்டியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT