Published : 14 Jul 2023 08:11 PM
Last Updated : 14 Jul 2023 08:11 PM
சென்னை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. திட்ட அறிக்கையை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பித்தார் சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக்.
கோவை மெட்ரோ ரயில்: கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில்: மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6 ஆயிரம் கோடியும் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT