

மதுரை: மதுரை- நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் பிரம்மாண்ட கட்டிடமாக அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் 3.30 லட்சம் புத்தகங்களுடன் திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது.
மதுரை - நத்தம் சாலையில் பிரம்மாண்ட அமைப்பில், நவீன கட்டுமான அம்சங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். இக்கட்டிடத்துக்கு என மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில், ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு பர்னிச்சர்கள், புத்தகங்களை அடுக்கி வைக்க தேவையான ரேக்குகளும், கட்டுமானத்துக்கு என ரூ.130 கோடியும் ஒதுக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த நூலகம் தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்கள், பிஎச்டி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்களுக்கும் வரப்பிரசாதமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கதது.
திறப்பு விழாவை நோக்கிய இந்த நூலகத்தில் தற்போது கலை இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் என, சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அறைகள் வாரியாக ஒழுங்குப்படுத்தி வாசகர்கள் படிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது: ''தென்மாவட்ட மக்கள் மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் உள்ளிட்ட வாசிப்பை நேசிக்கும் அனைவரும் ஈர்க்கும் வகையில் இந்நூலகம் அமைய பெற்றுள்ளது. நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மட்டுமே வாங்குவதற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், கலை, அறிவியல், தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆங்கில புத்தகங்கள், போட்டித் தேர்வர்களுக்கான புத்தகங்கள், பயிற்சி ஏடுகள், விவசாயம் தொழிலுக்கான புத்தகங்கள், பிரத்யேகமாக குழந்தைகளைக் கவரும் புத்தகங்கள் இதுபோன்று வேறு எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பிரமாண்ட வடிவில் இன்றைய தொழில்நுட்பத்துடன் நவீன அம்சங்களுடன் கட்டிய இந் நூலகம் பெரிய கலை சொத்தாகவும், ஏற்கெனவே இருக்கும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் சேரும் என்றே கூறலாம்'' என்றார்.
மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட மக்களே எதிர்பார்க்கும் இந்நூலகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 15 அன்று திறந்து வைக்கிறார். இதற்காக நூலகம் அருகிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.