

“மக்களவைத் தேர்தல் வருவதால் எச்சரிக்கை அவசியம்”: “மக்களவைத் தேர்தல் வர இருப்பதால் அடுத்த ஓர் ஆண்டு காலம் மிகவும் முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையுடன் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவோரை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் அதிகாரிகளுக்கு சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் சந்திப்பு: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் குறிப்பாக, செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது. முன்னதாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்: "செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்" என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு குறைந்துள்ளது”: தமிழகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆக.1-ல் ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
“மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டால் போராட்டம்”: 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமலாக்கத் துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பு ரத்து: அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பதவி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்தும், மிஸ்ரா ஜூலை 31-ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திரிணமூல் முன்னிலை: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 74,000 உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புகளுடன் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் 205.33 மீட்டர் என்ற அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
‘வறுமையில் இருந்து மீண்ட 41.5 கோடி பேர்’: வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் சமீபத்தியக் குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.