

ஈரோடு: ஆக்கிரமிப்புகளால் 100 ஏக்கர் அளவுக்கு ஓடத்துறை குளம் சுருங்கியுள்ள நிலையில், அங்கு கொட்டப்படும் குப்பைகளால் குளம் மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ளது ஓடத்துறை கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 400 ஏக்கரில் குளம் அமைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மற்றும் மழை நீரால் நிரம்பும் இந்த குளத்தின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 600 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறப்பு மற்றும் மழைக்காலங்களில் ஓடத்துறை குளம் நிரம்பி, அதன் உபரி நீர் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் சென்று கூடுதலான நிலங்களின் பாசனத்துக்கு உதவி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓடத்துறை குளம், ஆக்கிரமிப்புகளால் 100 ஏக்கருக்கு மேல் சுருங்கியுள்ளதால், நீர் தேங்கும் அளவும் குறைந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓடத்துறை குளமானது 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்தில் 80 ஏக்கர் வரையிலான நிலத்துக்கு முழுகும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குளத்தில் நீர் இல்லாதபோது, இந்த நிலங்களில் சாகுபடி செய்து கொள்ளலாம். குளத்தில் நீர் நிரம்பும்போது, சாகுபடியை விட்டுவிட வேண்டும்.
இந்த நிபந்தனையின் பேரில் பட்டா வழங்கப்பட்ட குளத்தின் பல பகுதிகள் சமப்படுத்தப்பட்டு, தொடர்ந்து சாகுபடி செய்யும் நிலமாக மாற்றப்பட்டு விட்டது. இதுதவிர, குளத்தையொட்டி 70 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரின்பேரில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் அளவீடு செய்யப்பட்டு, கற்கள் நடப்பட்டன. அதன்படி, ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓடத்துறை குளம் நிரம்பினால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, ஓடத்துறை, ஆப்பக்கூடல், பெருந்தலையூர், பொம்மநாயக்கன்பாளையம், அய்யம் பாளையம் என 20 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் பயன்பெற்று வருகின்றன. மேலும், இந்த குளத்தில் மீன்வளத்துறை விடும் மீன் குஞ்சுகளைக் கொண்டு, ஆண்டுக்கு 20 டன்னுக்கு மேலாக மீன் கிடைக்கிறது. இந்நிலையில், குளக்கரையில் குப்பைகளைக் கொட்டி எரிக்கும் நடவடிக்கையால் குளம் மாசடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, ஓடத்துறை ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வி.கே.வெங்கடாசலம் கூறியதாவது: ஓடத்துறைக்கு அருகிலுள்ள பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், ஓடத்துறை குளத்துக்கு நீர் வரும் பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களைக் கொட்டி தீ வைத்து வருகின்றனர். இக்கழிவுகள் குளத்தில் கலந்து மாசினை ஏற்படுத்தி வருகின்றன.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், குப்பைக் கழிவுகள் குளத்து நீரில் முழுமையாக கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தின் நீர் பாதிப்படைவதோடு, மீன்களும் பாதிக்கப்படும். இங்குள்ள குப்பைகளை சுத்தப்படுத்துவதோடு, குப்பைகளை எரிக்கவோ, கொட்டவோ அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக, ஈரோடு ஆட்சியர், கோபி கோட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.