Published : 09 Jul 2023 08:40 AM
Last Updated : 09 Jul 2023 08:40 AM

வருமான வரித்துறை நடவடிக்கையால் அச்சத்தில் தவிக்கும் திமுக அமைச்சர்கள்: இபிஎஸ் கருத்து

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையால் திமுக அமைச்சர்கள் பயத்தில் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்ல தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமாரின் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு பணி வழங்கியது தவறு.

அவருக்கு நல்ல ஓய்வு அளித்திருக்க வேண்டும். ஆனால், ‘வீட்டிலும், பணியிலும் அவருக்கு மன அழுத்தம் கொடுக்கப்படவில்லை’ என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் அவருக்கு எதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு காவலர் நலவாழ்வுத் திட்டம் செயல்பட்டு வந்தது. காவலர்களுக்கு உரிய ஓய்வு அளித்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது ஏற்கெனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஊழல் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால், ஊழல் தடுப்புப் பிரிவு அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவை கொடுத்தால் எப்படி சரியாக இருக்கும்? அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இப்போதுள்ள பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தங்கள் கட்சி வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞராக நியமித்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதத்தை எடுத்து வைக்காததும், முழுமையான ஆதாரத்தை சமர்ப்பிக்காததும்தான் இப்போதுள்ள அமைச்சர்கள் பலர் விடுதலையாவதற்கு காரணம். வரும் மக்களவைத் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டோம்.

பூத் கமிட்டி, பாசறை கமிட்டி, மகளிர் குழு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. தற்போது 1.60 கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளனர். வரும் ஆக.20-ம் தேதி மிகப்பெரிய எழுச்சி மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் செய்திகளை பின்னர் அறிவிப்போம். வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை காரணமாக சுமார் 20 நாட்களாக திமுக அமைச்சர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. எனவே, வழியில் பயம் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. தற்போது காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது. அவர்களுக்கு கொள்கை என்பதே இல்லை. அதிகாரமும் பதவியும் இல்லாமல் திமுகவினருக்கு தூக்கம் வராது.

தற்போதைய திமுக ஆட்சியில் காய்கறிகளின் விலை உட்பட அனைத்து பொருட்களின் விலைவாசியும் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சரியான மருத்துவம் இல்லை. திறமையற்ற அரசுதான் இதற்கு காரணம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

திருச்செந்தூர் கோயிலில் தரிசனம்: முன்னதாக, எதிரிகளை வீழ்த்துவதற்காக திருசெந்தூர் கோயிலில் சூரசம்ஹார மூர்த்தி சந்நதியில் நடத்தப்படும் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை செய்து அவர் வழிபட்டார். முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜு, விஜய பாஸ்கர், உதயகுமார், தளவாய் சுந்தரம், எம்எல்ஏ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, மாவட்டச் செயலாளர் கணேச ராஜா உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x