Published : 09 Jul 2023 09:13 AM
Last Updated : 09 Jul 2023 09:13 AM

தலைமன்னார் அருகே தரைதட்டி நிற்கும் கப்பல்கள்: கடல் சீற்றத்தால் மீட்பு பணி தாமதம்

தலைமன்னார் அருகே தரைதட்டி நிற்கும் 'அதுல்யா' மிதவை கப்பலை பார்வையிட்ட மக்கள்.

ராமேசுவரம்: தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு 87 மீட்டர் நீளமுள்ள 'அதுல்யா' என்ற மிதவைக் கப்பலும், அதனுடன் இணைந்த 'அவாத்' என்ற இழுவைக் கப்பலும் சென்றன.

அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கி 2 கப்பல்களும் வந்து கொண்டிருந்தன. இந்தியப் பெருங்கடலை தாண்டி வந்து கொண்டிருந்தபோது ‘அவாத்’ இழுவைக் கப்பலில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அதே நேரம் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காணப்பட்டது. இதையடுத்து இலங்கையின் மன்னார் பகுதியை நோக்கி 2 கப்பல்களும் நகர்ந்து சென்றன.

இது தொடர்பாக கப்பலில் இருந்த மாலுமிகள், கடந்த 6-ம் தேதி சென்னை மற்றும் கொழும்புவில் உள்ள கடல்சார் மீட்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 7-ம்தேதி பிற்பகல் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு தெற்கேநடுக்குடா கடற்கரைப் பகுதியில் 2 கப்பல்களும் தரைதட்டி நின்றன.

இந்த கப்பல்களில் கோயம்பத்தூரைச் சேர்ந்த வினோத் குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வ மாரியப்பன், புவனேசுவரத்தை சேர்ந்த ரஞ்ஜன், மிராஸ்பூரை சேர்ந்த ராஜ் பகதூர் ஆகிய 4 இந்திய மாலுமிகள், 5 இந்தோனேசிய மாலுமிகள் என மொத்தம் 9 மாலுமிகள் உள்ளனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு உள்ள அவாத் இழுவை கப்பலை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள கடல்சார் மீட்பு மையம், அந்நாட்டு கடற்படையினர் மூலம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், தரைதட்டி நிற்கும் கப்பல்களை மீட்க இந்தியாவிலிருந்து மீட்பு கப்பல் ஒன்று தலைமன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தற்போது கடல் சீற்றமும், பலத்த காற்றும் நீடித்து வருகிறது. இதனால் கப்பலின் இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியும், மீட்பு பணிகளும் தாமதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x