டிஐஜி விஜயகுமார் தற்கொலை: உண்மைக் காரணத்தை விசாரிக்க ராஜன் செல்லப்பா எம்எல்ஏ வலியுறுத்தல்

ராஜன் செல்லப்பா | கோப்புப் படம்
ராஜன் செல்லப்பா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை தொடர்பாக உண்மை நிலவரம் குறித்து விசாரிக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.

சென்னையில் இருந்து விமான மூலம் அவர் மதுரைக்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழக அரசு சீர்கெட்டு போய் உள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மதுரையில் திருமணத்தை முடித்த காவல் துறை அதிகாரி தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும் அளவுக்கு பணிச்சுமை காரணமா? அல்லது வேறு காரணம் உண்டா என தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு காவல் துறையில் வரலாற்றில் நிகழவில்லை. காவல் துறை ஆணையம் இது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த அரசு மிக பலவீனப்பட்டு கிடக்கிறது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் வெற்றி செல்லாது என்பதில் நீதித் துறை தெளிவான கருத்துகளை சொல்லி இருக்கிறது. நீதித்துறை காலக்கெடு கொடுத்துள்ளது. உண்மை காரணம் தெரிந்தபின் பேசுவோம்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது தொடர்பாக இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் விரைவில் அதற்கான நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன். அதிமுக பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையில் ஆகஸ்டு 20-ல் நடக்கும் மாநாடும் சிறப்பாக நடக்கும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9-ம் தேதி மாநாட்டுக்கான கால்கோல் விழா நடக்கிறது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in