Published : 06 Jul 2023 06:00 AM
Last Updated : 06 Jul 2023 06:00 AM
விழுப்புரம்: பொருளாதாரத்தில் பின் தங்கிய எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்துடன் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஓமந்தூர் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் 39 ஜோடிகளுக்கு தலா ரூ.1 லட்சம் செலவில் திண்டிவனம் அருகே நேற்று திருமணம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையேற்று, இத்திருமண நிகழ்வை நடத்தி வைத்தார்.
திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நேற்று காலை 10.15 மணி முதல் 11.45 மணிவரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு இத்திருமண நல்நிகழ்வு நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்வுக்காக
விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், கரூர் , நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 39 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும் பாஜக பிரமுகருமான ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளி (ஓமந்தூர்) செயலாளருமான ஹரிகிருஷ்ணன் முன்னிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருமண மாங்கல்யத்தை எடுத்து தர, 39 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் வீட்டாரின் இந்துவைபவ அடிப்படையில் 4 கிராம் தங்கத்தாலி, மணமகளுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவை, மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் பட்டு துண்டும் வழங்கப்பட்டது.
திருமண விழாவையொட்டி 10 ஆயிரம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு, 39 ஜோடிகளின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பிரம்மாண்ட பந்தலில் கூடியிருந்த அவர்கள் ஜோடிகளை ஒரு சேர ஆசிர்வதித்தனர். திருமண விழாவையொட்டி காலை, மதியம் இரு வேளையும் பிரபல சமையல் கலைஞர்களின் கை பக்குவத்தில் சமைக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
பிரம்மாண்டமாக நடந்த இத்திருமணத்தில் மணமக்களை வாழ்த்திப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இத்தம்பதிகள் அனைவருக்கும் அனைத்து வளங்களும் கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தினார்.
இத்திருமண விழாவில் பாஜகசெயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், நிர்வாகிகள் அமர்பிரசாத், மாநில செயலாளர் சம்பத், மாவட்டத் தலைவர்கள் ராஜேந்திரன், கலிவரதன், பிரச்சார செயலாளர் விநாயக மூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்ற ரகுராமன், புதுச்சேரி எம்எல்ஏக்கள் சிவசங்கர், அசோக் பாபு, கல்யாணசுந்தரம், வெங்கடேசன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT