

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாரல் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. குற்றால சீசன் தொடங்கிய நிலையில் மழைநீர் நிறைந்த சாலைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியதை அடுத்து தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர்.
இதனால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட நகரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதில் ராஜபாளையம் நகரில் நேரு சிலை முதல் சொக்கர் கோயில் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் நெடுஞ்சாலை செல்கிறது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியதை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. சாலையோரம் இருந்த பள்ளங்கள் கடந்த நவம்பர் மாதம் சிமெண்ட் கான்கிரீட் மூலம் ஒட்டு போடப்பட்டது. அதன் பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் வருகையை முன்னிட்டு சாலையில் இருந்த பள்ளங்களில் இரு முறை ஒட்டு போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்த சாரல் மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு போட்ட இடங்களில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. ராஜபாளையம் நகரை கடப்பதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ''சபரிமலை சீசன் மற்றும் குற்றால சீசன் என ஆண்டுக்கு 2 முறைக்கு மேல் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறோம். அதில் கடந்த சில ஆண்டுகளாக ராஜபாளையம் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் நகரை கடப்பது என்பது போர்க்களமாகவே உள்ளது. 2 கி.மீட்டர் தூரத்தை கடப்பதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனாலேயே பலர் 50 கிலோ மீட்டர் சுற்றி கோவில்பட்டி, சங்கரன்கோவில் வழியாக குற்றாலம் செல்கின்றனர்.
சபரிமலை சீசனுக்கு இந்த வழியாக செல்லும் போது சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போதும் ராஜபாளையத்தில் மட்டும் அதே குண்டும் குழியுமான சாலை, அதே போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. நான்கு வழி சாலை பணிகள் முடிந்தால் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றனர்.