

சென்னை: அரசு மருத்துவர்கள் தேர்வில் கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதாரத் துறை அமைச்சர், செயலரிடம் மனு வழங்கப்பட்டது.
அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.பாலகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தனி ஊதிய உயர்வு ஆணை வெளியிட வேண்டும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) நடத்திய தேர்வில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோய் துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், செயலர் ஆகியோர், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். குறிப்பாக, அரசு மருத்துவர்கள் ஊதிய விவகாரத்தில், கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்” என்றனர்.