

சென்னை: ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழு முன்பு குழந்தையின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகினர். இந்த விசாரணையில் 21 கேள்விகள் கேட்கப்பட்டதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களிடம் குழந்தையின் பெற்றோர் முன்னிலையில் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின்னர், குழந்தையின் தாய் அஜிஸா கூறியது: "விசாரணை நல்லபடியாக முடிந்தது. எதனால் இந்தப் பிரச்சினை வந்தது, இந்த பிரச்சினை எந்த தேதியில் இருந்து ஆரம்பித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மருத்துவக் குழுவினர் கேட்டனர். எல்லா கேள்விகளும் எழுத்துபூர்வமாகத்தான் கேட்டனர். 3 பக்கத்தில் 21 கேள்விகள் இருந்தன. மருத்துவமனையில் 3 நாட்கள் நடந்த விவகாரம் குறித்துதான் அந்த 3 பக்கங்களிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
கடந்த மாதம் 29-ம் தேதி அந்த ஊசி போட்டதற்கு பிறகுதான் குழந்தைக்கு இந்தப் பிரச்சினையே வந்தது. வலது கை விரலில் இருந்து மணிக்கட்டுப் பகுதி வரை கருஞ்சிவப்பாக மாறுகிற வரை, அவர்கள் அலட்சியமாகத்தான் இருந்தார்கள். நான் பலமுறை அவர்களிடம் சென்று சொல்லியும், அவர்கள் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை. செவிலியர், மருத்துவரின் அலட்சியத்தால்தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான். என் பையனுக்கு வந்த நிலை இனிமேல் யாருக்குமே வரக் கூடாது என்பதற்காகத்தான், நான் இவ்வளவு தூரம் முயற்சி எடுத்துள்ளேன். என்னோட பையனுடைய கை இப்படியான அநீதிக்கு தமிழக அரசு கண்டிப்பாக நீதி சொல்லியாக வேண்டும்.
எனவே, இந்த மருத்துவக் குழு நடத்தும் விசாரணை, அவர்கள் எடுக்கும் நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் மட்டுமில்லாமல், இனிமேல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனிமேல் யாரும் இந்த தவறை மறந்துகூட செய்யக் கூடாது" என்று அவர் கூறினார்.
நடந்தது என்ன? - ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் -அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் கை செயலிழந்து, அழுகியது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது.
இந்நிலையில், அங்கு நேற்று சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் உடனிருந்தனர்.
குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “இந்தக் குழந்தை 32 வாரத்தில், குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. குறைவான எடை, இதயத்தில் ஓட்டைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை போராடி வந்துள்ளது. ஏற்கெனவே, தேவக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்தக் குழந்தைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழந்தைக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டு, வலது கையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, வலது கையை அகற்றியுள்ளனர்.
குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பெற்றோர் குற்றம் சாட்டுவதால், விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். குழந்தையின் சிகிச்சையில் அலட்சியம், கவனக்குறைவு இருந்தது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் பெற்றோர் விருப்பப்பட்டால், தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து வந்துகூட சிகிச்சை குறித்து ஆய்வு செய்யலாம். அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை குறை சொல்ல வேண்டாம்” என்று அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.