

கிருஷ்ணகிரி: சாமல்பள்ளத்தில் இருந்து உலகம் செல்லும் சாலையில் உள்ள அஞ்சலம் கிராமம் வரையான சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளதால், தினமும் சிரமத்துடன் கிராம மக்கள் சென்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சாமல்பள்ளம் கிராமம். சாமல்பள்ளத்தில் இருந்து உலகம் கிராமம் வரை செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதன் இடைப்பட்ட தூரம் சுமார் 7 கி.மீ தூரம். இச்சாலையில் இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இம்மிடிநயக்கனப்பள்ளி, சினகானப்பள்ளி, கரகூர், ராமாபுரம், புலியரசி, ஓசஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டூர், கீழ் மொரசுப்பட்டி, மேல்மொரசுப்பட்டி, செந்தூரான் கொட்டாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 20-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக காய்கறிகள், மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்து, சூளகிரி, ராயக்கோட்டை சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இச்சாலையில் நாள்தோறும் விவசாயிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, சாமல்பள்ளம் தொடக்கத்தில் இருந்து அஞ்சலம் கிராமம் வரை முற்றிலும் சேதமாகி உள்ளது. இதனால் நாள்தோறும் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருவதாக கூறுகின்றனர்.
இது குறித்து சினகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலர் கூறும்போது, தார் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமாகி, ஜல்லிகள் பெயர்ந்த நிலையிலும், குண்டும், குழியுமாகவும், ஒரு சில இடங்களில் மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் நாள்தோறும் மிகுந்த அவஸ்தையுடன் இச்சாலையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இச்சாலையில் இயக்கப்படும் இருசக்கர வாகனம் முதல் டிராக்டர், சரக்கு வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது.
இதேபோல், கூலி வேலைக்கு செல்பவர்கள் மாலையில் சோர்வுடன், இச்சாலையில் வீடு திரும்பும் போது மேலும், பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாகி, போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறிவிடுகிறது. இவ்வழித்தடத்தில் காலை, மாலை வேளையில் மட்டும் இயக்கப்படும் அரசு நகர பேருந்து ஓட்டுநர் சிரமத்துடன் இயக்க வேண்டிய நிலை உள்ளது.
இச்சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் இச்சாலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.