

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே விவசாயிகள் சொந்த செலவில் அமைத்த காவல் சோதனைச்சாவடியில் காவலர்கள் பணியில் இல்லாததால் திருட்டு, வேட்டை உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் தடையின்றி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயில், வாழவந்தான், பிராக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதியில் மலையில் இருந்து உருவாகும் ஆறுகள், ஓடைகள் அதிகளவில் இருப்பதால் பைக், மாட்டு வண்டி, டிராக்டர்களில் சட்டவிரோத மணல் கடத்தல் நடந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்துவது, மான், காட்டு பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட இப்பகுதிக்கு வருவோர் தோட்டங்களில் விளைபொருட்கள், மின் வயர், மின் மோட்டார், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, வனத்துறை மற்றும் காவல் துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இது குறித்து தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு ஆட்சியரின் அனுமதி பெற்று சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிராக்குடி கண்மாய் அருகே தங்கும் வசதி, கழிப்பறை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தனர். மலைப்பகுதியில் இருந்து நகருக்குள் வருவதற்கு இதுவே பிரதான வழி என்பதால், விளைபொருட்கள் திருட்டு மற்றும் சட்டவிரோதச் செயல்கள் பெருமளவு தடுக்கப்பட்டன. ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக சோதனைச் சாவடியில் போலீஸார் இல்லாததால் விளைபொருட்கள் திருட்டு அதிகளவு நடப்பதாக புகார் எழந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார்கோயில், ராக்கச்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு உள்ளிட்டவற்றில் வனத்துறையினர் சோதனை சாவடிகள் உள்ளன. ஆனால், சேத்தூர் பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்கவில்லை.
இதனால், சட்டவிரோதச் செயல்கள் நடக்கின்றன. இரவு நேரங்களில் விளை பொருட்கள் அதிகளவு திருடப்படுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சோதனைச் சாவடியில் போலீஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.