

பருவமழைக்கு முன்பு சாலைப் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு: "இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடித்து, மக்களின் இன்னல்களைப் போக்கிட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தையின் கை அகற்றம்”: “அறுவை சிகிச்சை செய்து கையை எடுக்காவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், 3 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “மூன்று மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்றோர் மற்றும் சிகிச்சையளித்தவர்களிடம் விசாரித்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே,"அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது எதேச்சையானதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்தக் குழந்தைக்கு தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: தக்காளி விலை கிலோவுக்கு ரூ.140 வரை அதிகரித்த நிலையில், வடசென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் விவகாரம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் ரவி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை: ஆளுநர் ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்: “‘பராசக்தி’ தொடங்கி ‘மாமன்னன்’ வரை கலை வடிவங்களிலும் ‘சமூக நீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்” என இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேலும், சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குள் இருந்தாலும், அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாமன்னன் திரைப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித், திமுகவில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக உதயநிதி ஸ்டாலின் ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என்று கூறியிருந்தார்.
ஜூலை 17, 18-ல் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்: "பாட்னாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். பாசிசம் மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் எங்களின் பார்வையில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
“கட்சியைக் கட்டியெழுப்புவேன்” - சரத் பவார்: "வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போராட்டம் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கும். நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்" என்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் கூறினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி என்சிபி எம்எல்ஏக்கள் 40 பேருடன் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
என்சிபி பிளவு குறித்து பாஜகவை சாடிய கபில் சிபல்: என்சிபி பிளவு குறித்து பாஜகவை விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் "முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்" - என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க காங்கிரஸில் பேசிய மோடி "ஜனநாயகத்தின் தாய்" என்று இந்தியா பற்றி கூறியதன் அர்த்தம் இதுதானோ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆப்பிரிக்க சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை: பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, பிரான்ஸில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பலர் 17 வயதினர் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.